ஜல்லிக்கட்டு: தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு

படத்தின் காப்புரிமை J SURESH
Image caption ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கு உச்சநீதிமன்றம் ஏற்கனவே தடை விதித்திருந்தது

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்துவதற்கு ஏதுவாக மத்திய அரசு நேற்று அரசிதழ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கும் நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக வழக்குகள் ஏதேனும் தொடரப்பட்டால், முடிவு எடுப்பதற்கு முன்பாக தமிழகத்தின் கருத்தையும் கேட்க வேண்டுமென்று தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு ஒன்றைத் தாக்கல்செய்துள்ளது.

எதிர்காலத்தில் ஜல்லிக்கட்டு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டால் தமிழக அரசின் தரப்பையும் கேட்க வேண்டும், தமிழக அரசு தரப்பைக் கேட்காமல் முடிவெடுக்கக்கூடாது என்று இன்று தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்துவதற்கு ஏற்கனவே உச்ச நீதிமன்றம் தடைவிதித்திருந்த நிலையில், அந்தப் போட்டிகளை நடத்துவதற்கு ஏதுவாக நேற்று அரசிதழ் அறிவிப்பு ஒன்றை இந்திய அரசு வெளியிட்டது.

காளைகள் காட்சிப்படுத்தக்கூடாத மிருகங்களின் பட்டியலில் இருந்தாலும், ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்தலாம் என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டிருந்தது.

ஆனால், மத்திய அரசின் இந்த அறிவிப்பு விலங்குகள் நல ஆர்வலர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெடா போன்ற அமைப்புகள் இந்த முடிவை எதிர்த்து நீதிமன்றத்திற்குச் செல்லலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அத்தகைய சூழலில் எதிர் மனுதாரராக மத்திய அரசுதான் இருக்கும் என்பதால், தங்கள் கருத்தையும் கேட்க வேண்டுமென தமிழக அரசு இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளது.

இதற்கிடையில், ஜல்லிக்கட்டுப் போட்டிகளை எதிர்க்க வேண்டாம் என்று மத்திய இணையமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் விலங்குகள் நல ஆர்வலர்களை கேட்டுக்கொண்டிருக்கிறார்.

மத்திய அரசு ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கு அனுமதி அளித்ததையடுத்து, தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடக்கும் மாவட்டங்களில் அந்தப் போட்டிகளை நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்திருக்கின்றன.